பதிவுகள் மன்றத்தின் முதல் பதிவு

கல்வி.

 

Parents are first teacher
Teachers are second Parents என்றொரு பொன்மொழி உண்டு.

ஒவ்வொரு குழந்தைக்கும் தம் பெற்றோர்தான் முதல் ஆசிரியர்! ஆசிரியர்கள்தான் இரண்டாவது பெற்றோர்! அதனால் தான், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே ஆசிரியர்கள் பெற்றோரிடம்  என்ன படித்திருக்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.. குழந்தைகளை வசதியான கல்விநிலையங்களில் சேர்த்துவிட்டோம் நம் கடன் முடிந்துவிட்டது என்று எண்ணும் பெற்றோரும், பாடத்திட்டத்தை முடித்துவிட்டோம்,  மதிப்பெண் வாங்குவதற்கு மாணவர்களைத் தயாரித்துவிட்டோம் நம் கடமை முடிந்தது என்று எண்ணும் ஆசிரியர்களும் தகுதியான மாணவர்களை உருவாக்கிவிடமுடியாது! பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்குக் கற்றுத்தரவேண்டிய அடிப்படைப் பாடத்தின் உட்கூறுகள் சிலவற்றைக் காண்போம்,
Creativity – படைப்பாக்கத் திறன்.
Self-discovery – சுய தேடல்
Self-confidence - தன்னம்பிக்கை
Unique ability – தனித்துவ ஆற்றல்
Critical thinking – வித்தியாசமான சிந்தனை
Motivation - ஊக்குவிப்பு
Curiosity – ஆர்வம்
Question asking – கேள்வி கேட்டல்
Humor – நகைச்சுவை
Endurance – சகிப்புத்தன்மை
Enthusiasm – உற்சாகம்
Self – discipline – சுய ஒழுக்கம்
Leadership – தலைமைத்துவம்
Courage – துணிவு
Sense of beauty – அழகுணர்ச்சி்
Sense of wonder – வியப்புணர்ச்சி
Humility – பணிவு
Humanity – மனிதாபிமானம்
Social awareness – சமூக விழிப்புணர்வு

இத்தகைய பண்புகளை உணர்த்தும் ஆசிரியர் சிறந்த ஆசிரியராவார்.




ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான்டா வளர்ச்சி!
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது!
என்றெல்லாம் சொல்லப்பட்ட அனுபவமொழிகள் எவ்வளவு ஆழமானவை என்பது இன்றைய அறிவியல் உண்மைகளைக் காணும் போதுதான் புரிகிறது.
குழந்தைகளுக்கு,

IQ - 120 இருந்தால் ஐஏஎஸ் படிக்கவைக்கலாம்
IQ - 110 இருந்தால் மருத்துவம் படிக்கவைக்கலாம்
IQ - 100 அல்லது அதற்குக் கீழே இருந்தால் ஏதாவது ஒரு பட்டம்படிக்கவைக்கலாம்
IQ - 80 க்கும் கீழே இருந்தால் சும்மா அவர்களைப் படி படி என்று துன்புறுத்துவதைவிட அவர்களின் பிழைப்புக்கான ஏதாவது தொழிலைக் கற்றுக்கொடுக்கலாம் என்று உளவியலாளர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

அந்தக் காலத்தில் மாணவர்களை, கற்பூர புத்தி, கரித்துண்டு, வாழை மட்டை புத்தி என்று பாகுபாடு செய்வார்கள்

கற்பூர புத்தி - இந்த வகை குழந்தைகள் சொன்னவுடனேயே புரிந்துகொள்வார்கள்..
கரித்துண்டு - இரண்டுமுறை சொன்னால் புரிந்துகொள்வார்கள்.
வாழை மட்டை புத்தி - எத்தனை முறை சொன்னாலும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.

இதில் பெற்றோர் தம், குழந்தைகள் எந்த வகையில் இருக்கிறார்கள், என்பதை அறிந்துகொண்டால் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.

மாணவர்களின் வகைப்பாடு
நன்னூல் என்னும் இலக்கண நூல் மாணவர்களை மூன்று வகையாகப் பாகுபாடு செய்கிறது.
அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.
நன்னூல் பொதுப்பாயிரம்
மாணாக்கனது வரலாறு

அன்னம்  அன்னம் பாலோடு தண்ணீர் கலந்திருந்தாலும் தண்ணீரிலிருந்து பாலை மட்டும் பிரித்து குடித்துவிடுமாம் அதுபோல ஆசிரியர் சொல்லும் கருத்துக்களில்,
நல்லது எது? கெட்டது எது? எடுத்துக்காட்டுக்காகச் சொல்வது எது?
மதிப்பெண்ணுக்காகச் சொல்வது எது? நம் மதிப்பை உயர்த்தச் சொல்வது எது? என்ற பாகுபாடு தெரிந்து பகுத்து உணர்ந்து கொள்வதால் அன்னம் போல்வர் முதல்மாணாக்கர் என்பார் பவணந்தியார். அதேபோல...

பசு  பசு மிகுந்த புல்லை உடைய இடத்தைக் கண்டால் அப்புல்லை வயிறு நிறைய மேய்ந்த 
பின்ஓரிடத்திற்கு போய்  இருந்து சிறிது சிறிதாக வாயில் வருவித்துக்கொண்டு  மென்று தின்றல் போல , முதன் மாணாக்கர், ஆசிரியரைக் கண்டால் அவர்தம் கல்வியறிவை தன்னுள்ளம் நிறையக்கேட்டுக்கொண்டு பின்பு ஓர் இடத்துப் போயிருந்து
 சிறிது சிறிதாக நினைவில் கொண்டு வந்துசிந்தித்தலாலும் தலைமாணாக்கரை பசுவோடும் ஒப்பிட்டு உரைப்பர்.

மண்  நிலத்தை நன்றாக உழுது, நீர்பாய்ச்சி, களைபறித்து உழவர் உழைத்தால் அதற்கேற்ப விளைச்சல் தரும் மண். அதுபோல இடைமாணாக்கர்கள் ஆசியரியரின் உழைப்புக்கேற்ப மதிப்பெண் எடுப்பார்கள்.

கிளி - தனக்குக் கற்பித்த சொல்லையன்றி வேறு ஒன்றையும் சொல்லாது அதுபோல,இடைமாணாக்கர் தமக்குக் கற்பித்த நூல் பொருளை அன்றி வேறொரு நூல் பொருளையும்சொல்லமாட்டார்கள் அதனால் இவர்களை இடைமாணாக்கர்கள் என்றனர்

ஓட்டைக் குடம்  எவ்வளவுதான் நீரை ஊற்றினால் குடம் ஓட்டையாக இருந்தால் அதில் நீர் தங்காது. அதுபோல இவ்வகை மாணவர்களுக்கு எவ்வளவு கற்பித்தாலும் அதனை இவர்கள் மறந்துவிடுவார்கள்.

ஆடு - ஒரு செடியிலே தழை நிறைந்திருந்தாலும் வயிறு நிறைய மேயாது செடிதோறும் 
போய்மேயும். அதுபோலக் கடைமாணாக்கர் ஓராசிரியரிடத்து மிகுந்த கல்வி
இருந்தாலும் அவரிடம்நிறையக் கற்றுக்கொள்ளாது பலரிடத்தும் போய்ப் பாடங்கேட்பார்கள்அவ்வாறு கேட்டாலும் அவர்கள் மனதில் எதுவும் தங்குவதில்லை.

எருமை - குளத்து நீரைக் கலக்கிக் குடிக்கும் எருமை. அதுபோலக் கடைமாணாக்கர் ஆசிரியரை வருத்திப் பாடங்கேட்பார்கள் இருந்தாலும் அவர்கள் நினைவில் எதுவும் நிலைத்திருப்பதில்லை.

பன்னாடை - தேன் முதலியவற்றைக் கீழே விட்டு அவற்றில் உள்ள குப்பைகளைப் 
பற்றிக்கொள்ளுதல் போலக் கடைமாணாக்கர் நல்ல பொருளை மறந்து விட்டுத் , தீய பொருளைச் சிந்தித்துப்பற்றிக் கொள்வார்கள்.

 

பெற்றோரும் ஆசிரியரும் உணர்ந்துகொள்ளவேண்டிய உண்மைகள்.

·        குழந்தைகளுக்குப் பாடம் மட்டுமே அறிவல்ல என்பதைப் புரியவைக்கவேண்டும்.
·        அவர்களின் கேள்விகளை மதித்து பொறுமையாக பதிலளிக்கவேண்டும். நமக்குத் தெரியாத வினாவாக இருந்தாலும் நாம் தெரிந்துகொண்டு அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும்.
·        குழந்தைகளை தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டாடுவதும், கண்டுகொள்ளாமலே விடுவதும் ஒருவிதமான தவறுதான்.
·        குழந்தைகளின் நினைவுத்திறனை அதிகரிக்க, செயல்திறனைவிரைவுபடுத்த நிறைய ஆலோசனைகளை இன்று பல இணையதளங்களே வழங்குகின்றன. அவற்றைத் தேடிப் பெற்றோர் அறிந்துகொண்டு குழந்தைக்கும புரியவைக்கலாம்.
·        நல்ல நூல்களைப் படிக்கும் வழக்கத்தை, இணையத்தைப் பயனுள்ளவாறு பயன்படுத்தும் முறைகளையும், நல்ல ஒழுக்கங்களையும் அவர்களுக்கு நாம் சொல்லித்தரவேண்டுமானால் முதலில் நாம் அந்த பழக்கங்களைக் கடைபிடிக்கவேண்டும்.
·        ஒவ்வொருநாளும் அவர்கள் என்னென்ன புதிதாகக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உற்றுநோக்கிவரவேண்டும்.

·          ஆசிரியர் தம் மாணவர்களுக்கு, கல்வி என்பது இருள் நிறைந்த காட்டில் கையில் இருக்கும் விளக்கு போன்றது. அது காடுமுழுக்க வெளிச்சம் தராது. இருந்தாலும் அடுத்த அடி எடுத்துவைப்பதற்கான தன்னப்பிக்கையைத் தரும் என்று கல்வியின் நோக்கத்தைப் புரியவைக்கவேண்டும்.

·          இன்றைய உலகில் ஆண்பெண் என்ற பாகுபாடுகளின்றி இருபாலரும் வேலைக்குச் செல்கின்றனர். நிறைய பணம் சம்பாதிக்கின்றனர். தம் குழந்தைகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவு செய்கின்றனர். இருந்தாலும், இன்றைய பெற்றோரால்  தரமுடியாத மதிப்புமிக்க செல்வம் நேரம் தான். அவர்களுக்கென சிறிது நேரம் ஒதுக்கி, அவர்கள் உலகத்தில் வாழும் பெற்றோரால், ஆசிரியரால் தான் சிறந்த குடிமக்களை உருவாக்கமுடியும் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும்.


முனைவர் இரா.குணசீலன்

தமிழ் விரிவுரையாளர்

கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி

திருச்செங்கோடு